ஒரு அனாதை பெண்ணை கோடீஸ்வரி ஆக்கிய மெழுகுவர்த்தி..

செல்வி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி.

ஏழ்மையான குடும்பம்.

குடிக்கு அடிமையான தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது.

படிப்பறிவில்லாத தாய்.

அக்கம்பக்கத்தில் கூலி வேலை செய்துகொண்டு பிழைத்து வந்தாள் செல்வியின் தாய்.

வீட்டில் வறுமை என்றாலும் செல்வி நன்கு படிப்பாள்.

ஒரு முறை ஆதரவற்ற பெண்களுக்கான இலவச தொழில் பயிற்சி வகுப்பு பற்றி ஒரு துண்டு நோட்டீஸ் செல்வியின் வீட்டு வாசலில் கிடந்தது.

இதேபோன்ற நோட்டீஸ் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீட்டின் முன்பும் வைக்கப்பட்டிருந்தது.

இலவசமாக மெழுகுவர்த்தி தயாரிக்கும் பயிற்சி தருவதாக அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.

தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்திகளை தாங்களே வாங்கிக் கொள்வோம் என்றும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

செல்வியின் தாய் மற்றும் அங்கு இருக்கும் ஒரு சில பெண்கள் இந்த ஒரு நாள் பயிற்சிக்கு செல்வதென முடிவெடுத்தனர்.

ஒரு திருமண மண்டபத்தில் இந்த பயிற்சி நடந்தது.

பயிற்சிக்கு வந்த அனைவருக்கும் காபி டீ மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

மெழுகுவர்த்தி தயாரிக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டது.

பயிற்சி வழங்கிய நிறுவனம், தாங்களே மெழுகுவர்த்தி தயாரிக்கும் உபகரணத்தை தருகிறோம், உற்பத்தி செய்வதற்கு மூலப் பொருளையும் தருகிறோம், உற்பத்தி செய்யப்பட்ட மெழுகுவர்த்தியை நாங்களே நல்ல விலைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று கூறியது.

மெழுகுவர்த்தி தயாரிக்கும் உபகரணம் மற்றும் மூலப் பொருளுக்காக ஒவ்வொருவரும் 25,000 ரூபாய் கட்ட வேண்டும் என்று கூறியது.

பலரும் இவ்வளவு பணம் எங்களிடம் இல்லை என்று அங்கேயே கூறிவிட்டனர்.

அதன் பிறகு அந்த நிறுவனத்தின் அதிகாரி ஆசை வார்த்தைகளை கூற ஆரம்பித்தார்.

25,000 ரூபாய் முதலீட்டில் நீங்கள் இந்த தொழில் ஆரம்பித்தால் ஒரே மாதத்தில் போட்ட முதலீட்டை எடுத்து விடலாம்.

அடுத்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு குறைந்தபட்சம் 25,000 வருமானம் கிடைக்கும்.

நான்கு மாதத்தில் நீங்கள் லட்சாதிபதி என்றெல்லாம் ஆசை வார்த்தை கூற, அங்கிருந்தவர்கள் சிந்திக்கத் துவங்கினர்.

செல்வியின் அம்மாவும் சிந்திக்கத் துவங்கினாள்.

அந்தப் பகுதியில் கந்துவட்டி தொழில் செய்துகொண்டிருந்த ஒருவர் இருந்தார்.

அவரிடம் பலரும்  பணம் பெற்றார்கள்.

செல்வியின் அம்மாவும் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு 25,000 ரூபாய் பெற்றுக் கொண்டார்.

தொழில் ஆரம்பமானது.

செல்வியும் அவளது அம்மாவும் முழுமூச்சாக மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.

முதல் வாரம் முழுவதும் செல்வியின் மெழுகுவர்த்தி தர குறைபாடு காரணமாக நிராகரிக்கப்பட்டது.

மீண்டும் மீண்டும் முயற்சி செய்து நல்ல தரத்துடன் மெழுகுவர்த்தி தயாரித்து அவற்றை நிறுவனத்திடம் விற்பனை செய்ய சென்ற போது அந்த நிறுவனம் அங்கு இல்லை.

அனைவரையும் ஏமாற்றி விட்டு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எங்கோ ஓடிவிட்டார்.

கூலி வேலைக்கு சென்ற பலரும் இதனால் கடனாளி ஆயினர்.

கந்துவட்டி காரரின் நெருக்குதல் ஆரம்பமானது.

இருபத்தி ஐயாயிரம் ரூபாய் ஒரே மாதத்தில் ஐம்பதினாயிரம் கடனாக மாறியது.

ஆறு மாதத்தில் சில லட்சங்கள் ஆக மாறியது.

செல்வியின் தாய் தினம் தினம் அவமானப்படுத்தப்பட்டார்.

ஒரு நாள் கந்துவட்டிக்காரன் தொல்லை தாளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செல்வி நிராதரவாக நின்றாள்.

அவளது சொந்தக்காரர்கள் சிலர் அங்கிருந்த ஆதரவற்றோர் பள்ளியில் செல்வியை சேர்த்து விட்டனர்.

தனது தாயுடன் சேர்ந்து மெழுகுவர்த்தி தயாரித்த அந்த நினைவுகள் செல்விக்கு மீண்டும் மீண்டும் வந்து சென்றது.

வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக எடுத்த முயற்சி அவளை தற்கொலை செய்து கொள்ளும்படி ஆகிவிட்டதே என்று தினம் தினம் கண்ணீர் சிந்தினாள்.

அவள் அம்மா அவளுக்காக கடைசியாக விட்டுச் சென்றிருந்த சொத்து அந்த மெழுகுவர்த்தி தயாரிக்கும் உபகரணம் மட்டுமே.

ஓய்வு நேரத்தில் சில மெழுகுவர்த்திகளை தானே தயார் செய்து, அந்த மெழுகுவர்த்தியை தனது தாயின் புகைப்படத்தின் முன் ஏற்றி அவளுக்கு அஞ்சலி செலுத்தினாள் செல்வி.

காலங்கள் உருண்டோடின.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் அவளுக்கு இலவசமாக டேலி சாப்ட்வேர் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஒருசில மாதங்களில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் அக்கௌண்ட்ஸ் செக்ஷனில் வேலை கிடைத்தது.

அந்த ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் இதுபோன்ற ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதில் விருப்பம் உள்ளவர்.

அந்த நிறுவனம் பல நாடுகளுக்கு ரெடிமேடு ஆடைகள் ஏற்றுமதி செய்து வந்தது.

அவ்வப்போது தனக்காக மெழுகுவர்த்தி தயாரிப்பதையும் அதை பற்றவைத்து தனது தாய்க்கு அஞ்சலி செலுத்துவதையும் அவள் நிறுத்தவில்லை.

அவளது அலுவலக மேஜையில் செல்வியின் தாய் புகைப்படமும் பிரத்தியேகமாக அவள் தயாரித்த ஒரு சில மெழுகுவர்த்திகளும் இப்போதும் உண்டு.

துணி தயாரிக்கும் நிறுவனம் என்பதால் மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு அனுமதி இல்லை.

நிறுவனத்திற்கு ஒரு முறை பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதியாளர்கள் வந்திருந்தனர்.

அதில் ஒரு இறக்குமதியாளர் செல்வி டேபிளில் இருந்த மெழுகுவர்த்தியின் பால் ஈர்க்கப்பட்டு அதை எடுத்து பார்த்தார்.

அந்த மெழுகுவர்த்தி வழக்கமான மெழுகுவர்த்தி போல இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.

ஒரு தாமரைப் பூவைப் போல அந்த மெழுகுவர்த்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த மெழுகுவர்த்தி எங்கே கிடைக்கும் என்று செல்வியிடம் அந்த இறக்குமதியாளர் கேட்டார்.

இது எங்கும் கிடைக்காது இது நானே தயாரித்தது என்று செல்வி கூறினாள்.

ஆச்சரியப்பட்ட அந்த இறக்குமதியாளர் அந்த மெழுகுவர்த்தியை தான் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு செல்விக்கு ஒரு ஐந்து யூரோ நோட்டை கொடுத்தார்.

மறுநாள் அந்த இறக்குமதியாளர் செல்வி  வருவதற்கு முன்பே அவளுக்காக அலுவலகத்தில் காத்துக்கொண்டிருந்தார்.

உடன் செல்வியின் முதலாளியும் அமர்ந்திருந்தார்.

வழக்கமாக வேலைக்கு வந்த செல்வி உடனடியாக முதலாளியின் அறைக்கு அழைக்கப்பட்டாள்.

30 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து வெளியே வந்த செல்வியின் முகம் தாமரை போல பிரகாசமாக மலர்ந்து இருந்தது.

செல்வி கையில் 20 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.

கூடவே உடனடியாக நூறு மெழுகுவர்த்திக்கான ஆர்டரும் கிடைத்திருந்தது.

முதலாளி செல்விக்கு ஒருவாரம் விடுமுறை அளித்து நூறு மெழுகுவர்த்தி தயார் செய்து கொண்டு வரச் சொல்லி இருந்தார்.

இரண்டு வாரத்தில் அந்த மெழுகுவர்த்தி அனைத்தும் பிரான்ஸ் நாட்டில் விற்பனையானது.

அடுத்து ஆர்டர் ஆயிரம் மெழுகுவர்த்தி என்று செல்விக்கு இமெயில் வந்தது.

செல்வியின் முதலாளி அவளுக்கென தனி ஏற்றுமதி நிறுவனத்தை துவங்க உதவி செய்தார்.

ஆயிரம் மெழுகுவர்த்திக்கான பணம் உடனடியாக வந்து சேர்ந்தது.

ஒரே மாதத்தில் செல்வி தனக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனத்தின் வாயிலாக தனது முதல் ஏற்றுமதியை செய்தாள்.

ஒவ்வொரு மெழுகுவர்த்தியையும் தயாரிக்கும் போதும் அன்னையின் முகமே நினைவுக்கு வரும்.

அடுத்தடுத்து ஆர்டர்கள் குவியத் துவங்கின.

சில வருடங்களில்செல்வி மெழுகுவர்த்தி ஏற்றுமதியில் குறிப்பிட்ட இடத்திற்கு முன்னேறி இருந்தாள்.

கடந்த வருடம் இந்தியாவிலிருந்து சுமார் 84 மில்லியன் டாலர்கள் அளவிற்கு மெழுகுவர்த்திகளை நாம் ஏற்றுமதி செய்துள்ளோம்.

நம்மிடமிருந்து மெழுகுவர்த்திகளை இறக்குமதி செய்த நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.

செல்வியின் ஏற்றுமதி அலுவலகத்தில் அவளது தாயின் புகைப்படம் உண்டு.

இன்றும் அந்த புகைப்படத்தின் முன் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவதை செல்வி வழக்கமாகக் கொண்டிருக்கிறாள்.

Export Import Business Consultant - WhatsApp 91-9043441374

https://youtube.com/c/EXPORTIMPORTCONSULTANT


Comments