எப்போதும் ஒரு தொழிலில் புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்வது நீண்ட காலத்தில் நல்ல பலனை தரும் ஆனால் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றி தரும் என்பது எந்த வகையிலும் உறுதி இல்லை.
பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு அதில் ஒன்றில் வெற்றி அடைந்து மிகப் பெரிய அளவில் தனது வியாபார சாம்ராஜ்யத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு தொழில் முனைவோரை பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

கோவையைச் சேர்ந்த அந்த நபர் ஒரு சிறிய வணிக வளாகத்திற்கு சொந்தக்காரர் அந்த வணிக வளாகத்தில் சுமார் 10 சின்னஞ்சிறு கடைகள் இருந்தன.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
ஒருவர் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்தார்.
மற்றொருவர் ஆடைகளை விற்பனை செய்தார்.

வேறொருவர் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்தார்.
ஒருவர் காலணிகளை விற்பனை செய்தார்.
இப்படி சுமார் 10 சிறு வியாபாரிகள் அங்கு வியாபாரம் செய்து கொண்டு இருந்தாலும் அவர்களால் மாதா மாதம் வாடகை கொடுப்பது என்பதே சவால் மிகுந்ததாக இருந்தது.
அந்த வணிக வளாகத்தின் சொந்தக்காரருக்கு மாதம் சரியாக வாடகை தருவதில்லை.
சில நேரங்களில் ஒரு மாதம் கூட காலதாமதமாகி வாடகை வருகிறது என்பது சற்று வேதனையாக இருந்தது.

ஒரு வணிக வளாகத்தின் உரிமையாளராக அவர் அங்கு தொழில் செய்துகொண்டிருந்த சின்னஞ்சிறு கடை உரிமையாளர்களிடம் தனது கோபத்தைக் காட்டாமல் ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதை ஆராயத் துவங்கினார்.
அதில் அவருக்கு பல்வேறு நிதர்சனங்கள் புரிய ஆரம்பித்தன.
நிலையற்ற விற்பனையால் கடைக்காரர்கள் வாடகை தர முடியவில்லை, மேலும் தங்கள் கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் கூட தர முடியவில்லை என்பதை உணர்ந்துகொண்டு இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று யோசிக்கத் துவங்கினார்.
நீண்ட காலமாக பல்வேறு நாட்கள் யோசனை செய்த பிறகு ஒரு யோசனையை அமல்படுத்தினார்.

அதன்மூலம் அங்குள்ள பத்து சிறு வியாபாரிகளும் பலன் அடைந்தனர்.
இவரும் பலன் அடைந்தார்.
அந்த கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் சரியானபடி சம்பளம் கிடைத்தது.
அவர்களது தொழிலும் வளர்ந்தது.
சில வருடங்கள் ஓடின.
அவர் மிகப்பெரிய வணிக வளாகத்தை நிறுவி, அந்த சிறிய வணிக வளாகத்தில் நடைமுறைப்படுத்திய அதே யோசனையை இங்கும் செயல்படுத்தத் தொடங்கினார்.
அது பல்வேறு வணிகர்களுக்கு மிகப்பெரிய வசதியாக இருந்தது.
அவர் நடைமுறைப்படுத்திய யோசனை என்ன அது எப்படி செயல்படுகிறது என்பதை கீழே பார்க்கலாம்.
நீங்கள் ஒரு சிறு வியாபாரியாக இருந்தால் அவரது வணிக வளாகத்தில் முன்பணம் தொகை கொடுத்து உங்கள் கடையில் பொருட்களை வியாபாரத்திற்கு வைக்கலாம்.
நீங்கள் கட்ட வேண்டிய பணம் மின்சாரத்திற்கு மட்டுமே.
உங்கள் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அந்த வணிக வளாகத்தின் உரிமையாளரால் நியமிக்கப்படுவார்.
நீங்கள் அந்த ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டாம்.
நீங்கள் கடைக்கு வாடகையும் கொடுக்க வேண்டாம்.
உங்கள் தொழிலுக்கான மார்க்கெட்டிங் வேலைகளையும் அந்த வணிக வளாக உரிமையாளரே பார்த்துக்கொள்வார்.
வாடகை, ஊழியர் சம்பளம், மார்க்கெட்டிங் போன்றவற்றிற்காக மாதமாதம் உங்கள் கடையில் விற்பனையாகும் மொத்த விற்பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவர் எடுத்துக் கொள்வார்.

இன்னும் எளிதாக விளக்க வேண்டுமென்றால் முதல் மாதம் உங்கள் கடையின் விற்பனை ஒரு லட்ச ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அவர் அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சுமார் 10% என்று வைத்துக்கொண்டால் 10,000 ரூபாய் எடுத்துக் கொள்வார்.
அதே வேளையில் அடுத்த மாதம் உங்கள் கடையில் மொத்த விற்பனை வெறும் பத்தாயிரம் ரூபாய் என்றால் அவர் அதில் ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுத்துக் கொள்வார்.
இது பல்வேறு சிறு வணிகர்களுக்கு உதவிகரமான திட்டமாக இருப்பதால் பலரும் அவரது வணிக வளாகத்தில் இடம் பிடிக்க போட்டி போடுகின்றனர்.
Comments
Post a Comment