அந்த இளைஞன் பிடெக் படித்து முடித்துவிட்டு
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
வெறும் 28 வயது மட்டுமே ஆன அந்த இளைஞருக்கு
இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது.
அந்த ஈடுபாட்டின் காரணமாக அடிக்கடி
ரிஷிகேஷ் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது.

அவர் வேலைபார்க்கும் ஊருக்கும் ரிஷிகேஷ்க்கும் அதிக தூரம் இல்லை.
ஆகையால் எப்போதெல்லாம்
விடுமுறை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர் ரிஷிகேஷ் சென்று விடுவார்.
ரிஷிகேஷ் கோயில்கள் அதிகம் உள்ள ஊர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்மீக அன்பர்கள்
ரிஷிகேஷ்க்கு தினமும் வந்து செல்வதுண்டு,
இந்த இளைஞன் ரிஷிகேஷ் செல்லும்போதெல்லாம்
பல்வேறு கோவில் மற்றும் கரைபுரண்டு ஓடும் ஆற்றின் அருகில்
அமர்ந்து அதை ரசிப்பது உண்டு.
கல்லூரிக்காலம் தொட்டே அவருக்கு வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லை.
மக்களோடு தொடர்புடைய ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும்
என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.
அதே வேளையில் தான் பார்க்கும் வேலையில் எந்த ஒரு திருப்தியும் இல்லை அவருக்கு.
தினமும் புது புது சாம்பிள்களை எடுத்து, ஆய்வு செய்து அறிக்கை அனுப்புவது
போன்ற மீண்டும் மீண்டும் ஒரே வேலையை செய்யக் கூடிய ஒரு சலிப்பு இருந்தது.
புதிய தொழில் ஆரம்பிப்பதற்கு கையில் பணம் இல்லை.
வயதான தாய் தந்தை இருப்பதால் அவர்களுக்கு குறைந்தபட்சம் ஏதேனும் பண உதவி
மாதம்தோறும் செய்ய வேண்டியிருந்தது.
தனது வேலையும் பாதிக்கப்படக்கூடாது, அதேநேரம் ஏதாவது மனதுக்கு திருப்தியாக
ஒரு தொழிலையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம்
அவருக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருந்தது.
இன்றும் அதேபோல் ஒரு படித்துறையில் அமர்ந்து கரைபுரண்டு ஓடும்
ஆற்றினை பார்த்துக்கொண்டிருந்தான் கொண்டிருந்தார்.
ஆற்றில் தண்ணீரோடு கலந்து பல்வேறு குப்பைகளும்
மிதந்து சென்று கொண்டிருந்தன.
அருகில் உள்ள கோவிலில் இருந்து சுவாமிக்கு சாத்தப்பட்ட மாலைகளை
கோவில் ஊழியர் ஒருவர் பெரிய கூடையில் கொண்டு வந்து ஆற்றில் கொட்டினார்.

அவ்வாறு கொட்டப்பட்ட மாலைகள் தண்ணீரில் மிதந்து சென்ற காட்சியை
அவர் பார்த்தார்.
அந்த மாலைகள் தொலைவில் இருந்த ஒரு பாலத்தின் அடியில் தேங்கி நின்றன.
அவ்வாறு தேங்கி நின்ற அந்த பூக்களை ரிஷிகேஷ் நகராட்சி ஊழியர்கள்
நீண்ட உபகரணங்களைக் கொண்டு சேகரித்துக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து ஆற்றில் பூக்கள் மிதந்து வந்து கொண்டே இருக்க,
அவர்களும் அவற்றை எடுத்துக் கொண்டே இருந்தனர்.
இதைப் பார்த்ததும் அவருக்கு தீப்பொறி போன்ற ஒரு யோசனை தோன்றியது.
ஏன் நாம் இந்த வாடிய பூக்களிலிருந்து ஒரு தொழிலை செய்யக்கூடாது?
ஒரு சில வாரங்களில் அந்த யோசனை முழுமை பெற்று,
அது ஒரு தொழிலாக உருவெடுத்தது.
ரிஷிகேஷில் மிகக் குறைந்த வாடகையில் ஒரு வீட்டினை எடுத்து
அங்கு இது போல தூக்கி எறியப்படும் பூ மாலைகளை சேகரித்துக் கொண்டு வந்து
அதை காயவைத்து பொடி செய்து சிறிது நறுமணங்கள் தரக்கூடிய
மூலப் பொருட்களை சேர்த்து ஊதுபத்தி தயாரித்தார்.
மூன்று-நான்கு நாட்களில் அந்த வாடிப்போன காய்ந்த மலர்கள்
இங்கு மணம் தரும் ஊதுபத்திகளாக உருவெடுத்தன.
இந்த தொழிலை செய்வதற்கு அந்த ஊரில் வருமானம் இன்றி கஷ்டப்பட்டுக்கொண்டு
இருந்த ஒரு சில குடும்பத் தலைவிகள்உதவியாய் இருந்தனர்.
அவர்களுக்கும் இதனால் சிறிது வருமானம் கிடைத்தது.
அந்த ஊரில் சற்று படித்த ஒரு இளம் பெண்
நிர்வாகத்தை நன்றாக கவனித்துக் கொண்டார்.
இந்த இளைஞனுக்கு வேலையை விட்டு இங்கு வர வேண்டிய தேவை இல்லை.
வார இறுதி நாட்களில் மட்டும் இங்கு வந்து நிர்வாகத்தை கவனித்துக் கொண்டார்.
வியாபாரம் நன்றாக நடந்தது.
இவர் இதுபோன்று தேவை இல்லாத உபயோகப்படுத்திய மலர்களை மறுசுழற்சி
செய்வதை கண்ட நகராட்சி அதிகாரிகள் அந்த மலர்களை சேகரித்து கொண்டுவந்து
அவரது இடத்தில் சேர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர், அதுவும் இலவசமாக.
கோவில்களில் பூ மாலைகள் விற்கும் வியாபாரிகள் தங்களிடம் எஞ்சியுள்ள விற்காத,
வாடிய மலர்களை தாங்களாகவே கொண்டு வந்து இவரிடம் கொடுத்தனர்.
இதனால் நதி மாசுபடுவது குறைந்தது.
அதேவேளையில் இவரது தொழிலுக்கான மூலப் பொருட்கள் இலவசமாக கிடைத்தன,
அதுவும் மூலப்பொருட்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய
போக்குவரத்து செலவும் இவருக்கு இல்லை.
தொழில் நன்றாக வளர்ந்தது.
தனது வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக தொழிலை கவனிக்கத் துவங்கினார்.
ரிஷிகேஷில் கோயில்களுக்கும் மலர்களுக்கும் பஞ்சமே இல்லை.
ஆகவே இவரது தொழிலுக்கான மூலப்பொருள் தட்டுப்பாடு என்பதே
அவருக்கு ஏற்படவில்லை.
தயாரிக்கப்பட்ட ஊதுபத்திகள் அங்கு உள்ள கோவில்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இதுபோல மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் ஊதுபத்திகளுக்கு கொஞ்சம்
கொஞ்சமாக நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்தது.
இவர் தனது உற்பத்திகளை இணையதளத்தில் விற்கத் துவங்கினார்.
விற்பனை நன்றாக நடந்தது.
தாய் தந்தையை தன்னோடு அழைத்துவந்து இருக்கச் செய்துவிட்டு முழு நேர
ரிஷிகேஷ்வாசி ஆனார்.
அவரது தொழிற்சாலையை கவனித்து வந்த அந்த இளம் பெண்ணை
பின்னாளில் மணமுடித்துக் கொண்டார்.
ஒரு மனிதனின் தொழில் செய்ய வேண்டும் என்ற வேட்கை அவரை
இந்த உயரத்திற்கு கொண்டுவந்தது என்றே சொல்ல வேண்டும்.
Www.kmsaites.blogspot.com
ReplyDelete