
மத்திய அரசு பல்வேறுவிதமான தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்வதையே விரும்புகின்றனர்.
அதேநேரம் மிகக்குறைந்த அளவிலான தொழில் முனைவோர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு திட்டங்கள் சென்று சேராத நிலையும் உள்ளது.
அதுபோன்ற ஒரு நல்ல திட்டத்தை பற்றி நாம் பார்க்கலாம்.
இந்த நாட்டில் பல்வேறு விதமான தொழில்கள் இருந்தாலும் சற்று ஆபத்தானது, நிலையான வருமானம் இல்லாத சூழல் நிலவும் ஒரு தொழில் மீன்பிடித்தொழில்.

நாளுக்கு நாள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழிலாளர்களும் தொழில்முனைவோர்களும் குறைந்துகொண்டே உள்ளனர்.
அதே நேரம் மக்களிடம் மீன் விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளது.
கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழில் தவிர நிலப்பகுதியில் குட்டை அமைத்து மீன் வளர்த்தல் மற்றும் இறால் பண்ணை போன்ற தொழில் முனைவோர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஊக்கம் தந்து வருகிறது.
இவை அல்லாமல் கடலிலேயே மிதவை கூண்டு மூலம் மீன் வளர்க்கும் ஒரு புதிய திட்டத்தை மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய கூண்டை கடலில் சில மீட்டர்கள் உள்பகுதியில் நிறுவி அங்கு அதிக விலைக்கு விற்கப்படும் மீன்களை வளர்க்கும் திட்டம் தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தால் கையாளப்படுகிறது.
இது தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் சென்னை பகுதிகளில் உள்ள மீன்பிடி தொழில் அல்லது புதிய தொழில் முனைவோருக்கு ஏற்றது.
சென்னையிலுள்ள ஒரு மீனவர் கூறும்போது, அவர் சிங்கி இறால், கடல் விரால், மற்றும் கொடுவா போன்ற ரகங்களை மிதவை கூண்டு முறையில் வளர்ப்பதாக கூறுகிறார்.
இவ்வகை மீன்கள் சுமார் ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகின்றன.
கூண்டு அமைப்பு செலவு ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை அதனுடைய அளவுகளுக்கு ஏற்ப வேறுபடும்.
புதிதாக இந்தத் தொழிலுக்கு வரும் தொழில் முனைவோருக்கு மத்திய அரசு மானியமும் தருகிறது.
ஆண்களுக்கு 30 விழுக்காடு மானியமும், பெண்களுக்கு 60 விழுக்காடு மானியமும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த மிதவை கூண்டு மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ளவர் மேலும் கூறும்போது இந்த திட்டத்தின் மூலம் அவர் நல்ல பலன் அடைந்துள்ளதாகவும் ஆரம்ப காலத்தில் ஒரு கூண்டு கொண்டே இந்தத் தொழில் தொடங்கியதாகவும் இப்போது சுமார் பத்து கூண்டுகளை அவர் சொந்தமாக வைத்திருப்பதாகவும் கூறினார்.
கடல் விரால் 700 ரூபாயில் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கொடுவா மீன் 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை ஒரு கிலோ விற்கப்படுகிறது.

இதன் மூலம் மிக விரைவிலேயே போட்ட முதலீட்டை எடுத்து விடுவதாகவும் அதிகமாக செலவு பிடிக்காத இந்த மிதவை கூண்டு மீன் வளர்ப்பு முறை அவருக்கு கை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் இந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினால், தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளவும், தமிழ்நாடு மீன்வளத்துறை உங்களுக்கு உதவ காத்துக்கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment